Tamilcube Academy - Tamil oral picture description practice 005 - For PSLE, P5 & P6

Tamil oral picture 5

உங்களுக்குக் கொடுக்கப்பட்ட படத்தைப் பார்க்கவும். பின்பு அதில் இடம்பெற்றவற்றைப் பற்றிப் பேசி, உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கவும்.


எழுத்து வடிவம்:

படம் – 3: பேரங்காடி

1. இந்தப் படம் ஒரு பேரங்காடியைக் காட்டுகிறது.

2. பேரங்காடியில் அவ்வளவாகக் கூட்டம் இல்லாததால் இது வாரநாளின் பகல் நேரமாக இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன்.

3. பேரங்காடியின் அடுக்குகளில் பொருட்கள் வரிசையாக அடுக்கி வைக்கப் பட்டிருக்கின்றன.

4. ஒரு மூதாட்டி தன் பேத்தியுடன் பேரங்காடிக்கு வந்திருக்கிறார். அவர் பொருட்கள் நிறைந்த கூடையை தூக்கிக் கொண்டு வரும்போது, அவருடைய பேத்தி, பாட்டிக்கு உதவுவதற்காக கூடையை தன்னிடம் கொடுக்கும்படி கேட்கிறாள். சிறுமியின் செயல் மிகவும் பாராட்டத் தக்கதாகும்.

5. ஒரு பெண்மணி, அடுக்குகளில் மேல் தட்டில் அடுக்கி வைக்கப் பட்டிருக்கும் பொருட்களில் ஏதோ ஒன்றை எடுப்பதற்கு முயல, அது கைதவறிக் கீழே விழுகிறது. பதட்டத்துடன் அப்பெண்மணி அதைத் தடுக்கிறார்.

6. மேலிருக்கும் பொருளை எடுப்பதற்கு கடை உதவியாளரின் உதவியை அவர் நாடியிருக்கலாம் என்று நான் நினைக்கிறேன்.

7. ஒரு பெண்மணி தள்ளுவண்டியில் இருக்கும் தான் எடுத்த பொருளின் விலையைப் பார்த்துக்கொண்டே நடந்து செல்கிறார்.

8. அவர் தன் கைப்பையை சரியாக மூடவில்லைபோல் தெரிகிறது. அவருக்கு பின்னால் வந்த குளிர்கண்ணாடி அணிந்த ஆடவர் ஒருவர், பெண்மணியின் கைப்பைக்குள் இருந்த பணப்பையை திருட முயல்கிறார்.

9. அங்கிருந்த பாதுகாவலர் அதைக் கவனித்து அக்குற்றச் செயலை தடுப்பதற்காக விரைந்து வருகிறார்.

10. கடமைவுணர்ச்சி தவறாத பாதுகாவலரின் செயல் பாராட்டத்தக்கதாகும்.

11. அடுத்தவரின் பொருளுக்கு ஆசைப்பட்ட ஆடவரின் செயல் கண்டிக்கதக்கதாகும்.

12. அந்தப் பெண்மணியும் சற்று கவனமாக இருந்திருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

13. காசாளரிடம் ஒரு ஆடவர் பணத்தைச் செலுத்திக்கொண்டு இருக்கிறார்.

14. அவருக்கு பின்னால் வரிசையில் நின்றுக் கொண்டிருந்த மலாய்ப் பெண்மணி, முட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் அடுக்கைக் கையில் எடுக்க, அதிலிருந்து முட்டைகள் கீழே விழுந்து உடைகின்றன.

15. காசாளர் அவரைப் பார்த்துச் சலித்துக் கொள்ள, அவரோ செய்வதறியாது விழிக்கிறார். இந்தப் பெண்மணி முன்னரே சற்று கவனமாக இருந்திருக்கலாம் என்று நான் நினைக்கிறேன்.

16. அவருக்குப் பின்னால் மற்றொரு பெண்மணி குழந்தையை தூக்கிக்கொண்டு நிற்கிறார். அக்குழந்தை அழுதுகொண்டிருக்க, அவர், சமாதானப் படுத்திக்கொண்டு தான் வாங்கிய மைலோ பொட்டலத்திற்குப் பணம் செலுத்த வரிசையில் நிற்கிறார்.

17. பொருட்கள் வாங்கியபின், இரண்டு கைகளிலும் பைகளுடன் கடைக்குள் இருந்து சாலைக்கு வருகிறார் மற்றொரு பெண்மணி. அப்போது, மிதிவண்டியில் ஒரு சிறுவன் வேகமாக அவர் மீது மோதுவது போல் வருகிறான். இருவரும் பதறி, பின் சமாளித்துக் கொள்கிறார்கள்.

18. பொது இடங்களில் நாம் கவனமாக இருப்பதுடன், சாலை விதிகளையும் மனதில் கொள்ள வேண்டும்.


ஒலி வடிவம்: