Tamilcube Academy - Tamil oral picture description practice 003 - For PSLE, P5 & P6

Tamil oral picture 3

உங்களுக்குக் கொடுக்கப்பட்ட படத்தைப் பார்க்கவும். பின்பு அதில் இடம்பெற்றவற்றைப் பற்றிப் பேசி, உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கவும்.


எழுத்து வடிவம்:

படம் – 5: சமூக மன்றத்தின் தேசிய தினக் கொண்டாட்ட விழா

1. இந்தப் படம் ஒரு சமூக மன்றத்தின் தேசிய தினக் கொண்டாட்ட விழாவைச் சித்தரிக்கிறது.

2. தேசிய தினக் கொண்டாட்டம் என்பது சிங்கப்பூரின் அனைத்து இன மக்களும் ஒற்றுமையுடனும் நல்லிணக்கத்துடனும் கொண்டாடும் ஒரு விழாவாகும்.

3. மேடையும், மேடையை சுற்றிள்ள இடமும் அழகாக அலங்கரிக்கப் பட்டிருக்கின்றன. தேசிய தினக் கொண்டாட்டம் என்ற வாசகம் பொறிக்கப்பட்ட பதாகை, வண்ண அலங்காரத் தோரணம், பலூன்கள் பூந்தொட்டிகள், மேடை அலங்கார விளக்குகள் என, மேடை அனைவரது கவனத்தையும் ஈர்ப்பதாக இருக்கிறது. ஆங்காங்கே தேசியக் கொடிகள் கட்டப்பட்டிருக்கின்றன.

4. விழாவின் சிறப்பம்சமாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் கலைநிகழ்ச்சிகள் மேடையில் கோலாகலமாக நடந்துகொண்டிருக்கின்றன.

4. மூன்று ஆடவர்களும் இரண்டு பெண்மணிகளும் மலாய்ப் பாரம்பரிய உடையில் நடனமாடிக் கொண்டிருக்கிறார்கள். ஆடவர்கள் கையில் தோல் இசைக்கருவி ஒன்றை இசைத்துக் கொண்டே நடனமாடுகிறார்கள். அது அவர்களின் பாரம்பரிய இசைக்கருவியாக இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன்.

5. மேடையில் நடக்கும் நிகழ்ச்சிகளைப் பலர் மெய்மறந்து ரசித்துக் கொண்டிருக்க, ஒரு சிலர் மட்டும் விழாவில் பொருந்தாமல் இருக்கிறார்கள். ஒரு ஆடவரும் பெண்மணியும் நடனத்தைக் கவனிக்காமல் ஏதோ பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்குப் பின்னால், இன்னொரு ஆடவர், தனது கைத்தொலைபேசியில் மிகச் சத்தமாக பேசிக்கொண்டிருக்கிறார். ஒரு சிறுவன் தன் இருக்கையில் ஒழுங்காக அமராமல், இரண்டு நாற்காலிகளில் கைகளையும் கால்களையும் பரப்பிக்கொண்டு அமர்ந்திருக்கிறான். இவர்களின் செய்கைகள் மிகவும் தவறானவையாகும்.

6. இடது கீழ்ப்புறத்தில் ஒரு நீள் மேசையில், நாட்டின் கொடிகள் வைக்கப்பட்டிருக்கின்றன. விழாவிற்கு வருவோருக்கு, ஒரு பெண்மணி கொடிகளை அன்பளிப்பாகக் கொடுத்துக்கொண்டிருக்கிறார். ஒரு மாது குழந்தையைத் தூக்கிக் கொண்டுவர, குழந்தை ஆர்வத்துடன் கொடியை வாங்குகிறது.

7. அவர்களுக்கு அருகில், ஒரு சிறுவன் கையில் கொடியுடன் ஓட மற்றொருவன் அவனை துரத்திப் பிடிக்க ஓடுகிறான். விழா நடந்துகொண்டிருக்கும்போது, மற்றவர்களுக்கு இடையூறு செய்யும் வகையில் இவ்வாறு விளையாடுவது தவறான செயலாகும்.

8. இடது மேற்புறத்தில், விளையாட்டு நடவடிக்கைகளுக்கான இடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

9. கூடைப் பந்து வலையும் சில கூடைப் பந்துகளும் அங்கே இருக்கின்றன. ஒரு சிறுவன் பந்தை கூடைக்குள் போட முயற்சிக்கிறான்.

10. அதற்கடுத்து, அதேபோலான பந்தை வீசியெறியும் விளையாடுமிடம் இருக்கிறது. அங்கே நான்கு சிறிய பெட்டிகள் இருக்கின்றன. சிறிய பந்துகளை ஏதேனும் ஒரு பெட்டிக்குள் வீசியெறிய வேண்டும். ஒரு பெண்மணி, தன்னுடைய மகளுக்கு அவ்விளையாட்டை எப்படி விளையாடுவது என்று கற்றுக் கொடுக்கிறார்.

11. இவற்றையெல்லாம் இரண்டு இளையர்கள் கவனித்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் அணிந்திருக்கும் ஒரே மாதிரியான உடையிலிருந்து அவர்கள் தொண்டூழியர்களாக இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன்.

12. தேசிய தினக் கொண்டாட்டம் என்பது பல்வேறு இன மக்களும் ஒன்றுகூடி தங்கள் நாட்டுப்பற்றையும் ஒற்றுமையுணர்வையும் வெளிப்படுத்தும் விழாவாகும். இக்கொண்டாட்டத்தில், அடுத்து வரும் ஆண்டுகளில் நாட்டின் வளர்ச்சிப்பணிகள் குறித்த செயல்பாடுகளும் முன்னுரைக்கப்படும்.

13. ஆக மொத்தத்தில், தேசிய தினக் கொண்டாட்டம் வரலாற்றை நினைவு கூர்வதற்கும் வருங்காலத்தை திட்டமிடுவதற்குமான ஒரு சிறப்பு மிக்க விழா என்றே கூறலாம்.

ஒலி வடிவம்: